|
ஆவிக்குரிய ஜீவியத்தை நாமே உருவாக்கும்படி தேவன் நம்மிடம் கேட்கவில்லை! அவ்வாறு உருவாக்குவது, நம்மால் முடியாது என்பதையும் தேவன் அறிந்திருக்கிறார். என்னுடைய சுயத்திற்கு நான் ஒவ்வொருநாளும் மரித்திட வேண்டும் என்று மாத்திரமே தேவன் என்னிடம் கேட்கிறார். அந்த மரித்த நிலையில்தான், அவர் தம்முடைய ஜீவியத்தை எனக்குள்ளும் என் மூலமாயும் ஜீவித்திட முடியும். எந்த அளவிற்கு அவர் தம்முடைய ஜீவியத்தை என் மூலமாய் வெளிப்படுத்த முடியும் என்பதெல்லாம்.... எந்த அளவிற்கு என் சுயத்திற்கு நான் மரித்து, எந்த அளவிற்கு நான் அவருக்குள் தொடர்ந்து நிலைத்திருக்கின்றேன் என்பதைப் பொறுத்தே உள்ளது! ஆகவே, என் திறமையோ அல்லது என் திராணியோ அல்ல! மாறாக, என்னை ஆயத்தமாய் அவருக்கு தருவதும்! ஆளுகை செய்யும் அவருடைய கர்த்தத்துவத்திற்கு என்னை முழுமையும் ஒப்புவிக்க விரும்பும் எனது விருப்பமுமே அவரது ஜீவியத்தை எனக்குள் கொண்டு வந்திட முடியும்!
என் சுயத்திற்கு மரித்திட எனக்கு மனதில்லாதிருந்ததே, தேவனுடைய செயலுக்கு இடையூறாய் இருந்ததை நான் கண்டேன். அவரோடு நான் மரிக்காமல் இருக்கும்போது, நான் அவருக்காக பிழைத்து வாழ முயற்சித்தேனே.... அதுவே கூடாத காரியம்!
நீண்ட கால தோல்வியின் அனுபவத்திற்குப் பிறகு, அவருடைய வல்லமையான கரம் என்னைத் தாங்கி நிலைநிறுத்தும் வல்லமையை இப்போது நான் அனுபவிக்கத் துவங்கி விட்டேன். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்! ஒரு பாமாலை கீதம் கூறுவதுபோல்....
அமிழ்த்தும் சேற்றிலிருந்து என்னை தூக்கியெடுத்தீர்
அன்பின் கரத்தினால் என்னைப் பாதுகாத்தீர்
அகால இருளிலிருந்து அகன்ற வெளிச்சத்தில் நிறுத்தினீர்
அவரே தூக்கினார்! அவருக்கே ஸ்தோத்திரம்!!
இப்போது, எனக்குள் யாதொரு நன்மையும் இல்லை என்பதை கண்டு கொண்டேன்! நான் ஒன்றுமில்லை! எனக்குள்ளும் ஒன்றுமில்லை! யாதொன்றும் செய்திட என்னால் இயலாது! இயேசுவே எனக்குளிருந்து, என்மூலமாய் செய்வதைத் தவிர... மற்ற அனைத்தும் என் கறைப்பட்ட பாவ மாம்சத்திலிருந்து விளைந்ததும்! அது தேவனால் ஏற்றுக் கொள்ள முடியாத “இஸ்மவேலுமாய்” இருக்கிறது!! அது, அமலேக்கியர்களின் நல்ல ஆடுகளை சவுல் ராஜா தேவனுக்குப் பலியிடுவது போலவும், அதை தேவன் புறக்கணித்தது போலவுமே இருக்கும்!! (1சாமுவேல் 15).
இதுபோன்ற சுயமுயற்சியில் உருவாக்கிடும் எந்த விளைவும், கடைசிநாளின் அக்கினியில் சிக்கிடும் மரம், வைக்கோல் மற்றும் புல்லைப் போல பொசுங்கிப் போய்விடும்!
அவ்வித செயலை, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட பாவியாகிய நான்.... பரலோகத்திற்கே கொண்டு சென்றாலும், அங்கும் அது பொசுங்கிப் போய்விடும்!! (1கொரி 3:12-15).
|