|
பேதுரு தவறிழைத்து, பாவத்தில் வீழ்ந்து தன் ஆண்டவரை மூன்று முறை மறுதலித்த நிகழ்ச்சிக்கு பின்புதான்...... அவர் மனஉருக்கம் நிறைந்த அப்போஸ்தலனாய் மாறமுடிந்தது! இப்படியெல்லாம் பேதுரு பாவம் செய்து வீழ்வது நிச்சயமாய் தேவனுடைய பூரண சித்தம் அல்லவே அல்ல!! இருப்பினும், பேதுருவிடம் ஓர் பலத்த கிரியை நடக்கும்படியே தேவன் இவைகளை அனுமதித்தார் என நாம் காணமுடிகின்றது. ஆம் இவ்வீழ்ச்சியானது, “தங்கள் வாழ்வில் தோல்வியடைந்தவர்களிடம்” இரக்கமும் தயவும் காட்டும்படிக்கு பேதுருவை மாற்றிவிட்டது!!
இத்தனை பெரிய பாவத்தில் பேதுரு வீழ்ந்த சூழ்நிலையை நாம் சற்று கவனித்துப் பார்த்தால், ஆண்டவரை மறுதலிக்கும்படியான சோதனையை பேதுரு சந்திக்காமலிருக்க தேவன் வகை செய்திருக்க முடியும் என்றே காண்கிறோம். இருப்பினும், அச்சோதனை வேளையை பேதுரு தவிர்த்துக்கொள்ள தேவன் விரும்பவில்லை!
யோவான் 18:15-18 வசனங்களில், யோவானும் பேதுருவும் இயேசுவைப் பின்தொடர்ந்து பிரதான ஆசாரியனின் அரண்மனை மட்டும் வந்தார்கள். யோவான் ஏற்கனவே பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்தபடியால், அவனை அரண்மனை வாசல் காவலாளி உள்ளே அனுமதித்துவிட்டான். ஆனால் பேதுருவோ உள்ளே போகமுடியவில்லை! ஆகவே, வாசல் காவலாளியிடம் யோவான் சென்று பேதுருவுக்காக பேசி அவனும் உள்ளே வருவதற்கு அனுமதியைப் பெற்றான். இதுவரை நடந்த செயல் மிகவும் நன்றாக நடந்தது போலவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால், யோவான் அப்போது பேதுருவை உள்ளே அழைத்துச் செல்லாமலிருந்திருந்தால், அந்த ராத்திரியில் பேதுரு பாவம் செய்திருக்கமாட்டான் என்ற உண்மையைக் கண்டீர்களா? ஏனெனில், அரண்மனை உள்ளே சென்ற பின்புதான், பேதுரு கேள்விகேட்கப்பட்டு அவ்விடத்தில் தன் ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்து விட்டான்! (யோவான் 18:17,25,27).
“அப்படியானால், பேதுரு அரண்மனைக்குள் செல்ல அனுமதி கிடைக்காமல் தேவன் தடை செய்திருக்கலாமே? ஏன் தேவன் இவ்வாறு அனுமதித்தார்?” என்றெல்லாம் நாம் கேட்கக்கூடும். தேவன் தன் பங்கில் தவறு செய்துவிட்டாரோ? இல்லவே இல்லை! தேவன் தன் “சர்வ ஞான ஆளுகையின்படி” பேதுருவை யோவான் உள்ளே அழைப்பதற்கு அவரேதான் அனுமதித்தார்! எதற்காக? ஆம், பேதுரு தன் தோல்வியின் மூலமாய் ஓர் சிறந்த கல்வியைக் கற்றுத்தேற வேண்டும் என்பதற்காக!! இக்கல்வியைக் கற்காமல், பேதுரு அப்போஸ்தலர்களுக்குத் தலைவனாகவோ அல்லது ஆதி சபையின் தலையாய சுவிசேஷகனாகவோ மாறியிருக்கவே முடியாது!
பெருந்தோல்வியை பேதுரு சந்திக்கப் போகிறான் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தோல்வியின் நேரத்தில் பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதிருக்க வேண்டும் என இயேசு பேதுருவுக்காக ஜெபித்தார் (லூக்கா 22:31,32). ஆம், இயேசுவின் ஜெபம் கேட்கப்பட்டது!
அந்த கொடிய நிகழ்ச்சியில் (வீழ்ச்சியில்) பிரவேசித்த பேதுரு.... நொறுங்குண்டவனாயும், இரக்கம் நிறைந்தவனாயும் தேர்ச்சியடைந்து வெளியே வந்தான்!!
|