|
தான் உடுத்திக்கொண்ட “மனிதப் போர்வையின் பலஹீனத்தை” இயேசு உணர்ந்தவராய் இருந்தார். எனவே தனியே இருக்கக்கூடிய சமயம் எப்போது வாய்க்கும்? என்று பார்த்துக் கொண்டேயிருந்து, அந்த சமயங்களிளெல்லாம் தனியே ஜெபித்தார்!
இயேசு ஜனக்கூட்டத்திலிருந்து விலகி அடிக்கடி வனாந்திரத்திற்கு ஜெபிக்கப் போனார் என்று நாம் காண்கிறோம் (லூக்கா 5:16). அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால், தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் பகல் முழுவதும் ஜெப ஆலயத்தில் பிரசங்கிப்பார்! இரவில் ஒலிவமலைக்குச் செல்வார்! எதற்கு? எந்த இடையூறும் இல்லாமல் நீண்டநேரம் பிதாவோடு உறவாடி ஜெபிப்பதற்குத்தான்!! (லூக் 21:37,38).
இப்படியாய், சதா பிதாவைச் சார்ந்து வாழ்வதுதான், ஒருவன் விசுவாசத்தில் ஜீவிப்பதின் அர்த்தமாகும்!
தேவனுடைய வல்லமையினால் செய்கிறவைகள்தான் நித்தியமானவைகள்! மற்றவை யாவும் அழிந்துபோகும்! தேவனைச் சார்ந்து வாழ்கின்ற மனிதன், தண்ணீரண்டையில் நாட்டப்பட்டு தன் உணவை சம்பூரணமாய் ஈர்த்துக் கொள்ளுகிற மரத்திற்கு ஒப்பாய் இருக்கிறான் என்றே வேதம் கூறி மகிழ்கிறது (எரேமியா 17:5-8). அப்படித்தான் இயேசு வாழ்ந்தார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து (தேவ நதியிலிருந்து) தன் ஆவிக்குரிய ஆகாரத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டார்.
சோதனைகளில் இயேசுகிறிஸ்து அடைந்த வெற்றிக்கு காரணம், தன் மனுஷீக தீர்மானத்தினாலல்ல. மாறாக, ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட வல்லமையைக் கொண்டே ஜெயம் பெற்றார். இயேசு தான் கைக் கொண்டு போதித்த “தன்னைத்தான் வெறுத்தல்” என்றபோதகம், தன் ஆத்தும பலத்தை பூரணப்படுத்தினதினால் உண்டான போதகமல்ல. ஒருபோதும் இல்லை. அப்படியிருந்திருந்தால், அது யோக மார்க்கம் அல்லது புத்த மார்க்கம்! பரத்துக்கும் நரகத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசமானதாய் அதை வேதம் நமக்கு வேறுபடுத்தி போதிக்கிறது.
நாம் ஜீவிக்கவேண்டிய விதமாய் ஜீவிப்பதற்கும், தேவன் அங்கீகரிக்கிற விதமாய் ஊழியம் செய்வதற்கும் நம்மிடத்தில் வல்லமை இல்லை என்பதை இயேசு போதித்திருக்கிறார். பெலனற்ற கொடி, எப்படி கனி கொடுப்பதற்கு செடியில் நிலைத்திருக்க வேண்டியதோ அப்படியே நாமும் இருக்கிறோம், என்று சொன்னார். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவான் 15:5) என்றார். எனவே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாமல் நாம் சுயமாய் முயற்சித்து செய்கிற செயல்கள் யாவும் பூஜ்யமாய்த்தான் இருக்கும். எப்பொழுதும் “ஆவியில் நிறைந்திருக்க வேண்டியதன்” அத்தியாவசியம் இதிலே விளங்குகிறது (எபேசியர் 5:18).
|