English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 |  2013
ஜெபமே சாத்தானை நிலைகுலையச் செய்யும் போர்க்களம்!
பிப்ரவரி 2012 (3) - சகரியா பூணன்

மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என எபேசியர் 6:12 ஆணித்தரமாய் நமக்கு எடுத்துரைக்கிறது!

ஆவிக்குரிய வாழ்க்கையில் `ஜீவனோடு' இருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் பொல்லாத ஆவிகளோடு எப்போதும் ஓர் போராட்டத்தின் மத்தியில் இருப்பதை உணருவார்கள். ஆனால் ஆவிக்குரிய ஜீவனை இழந்த `செத்தவர்கள்' இதுபோன்ற போராட்டத்தை தங்கள் வாழ்வில் உணரமாட்டார்கள். ஏனெனில், இவர்கள் போர்களத்தில் `செத்துக் கிடக்கும்' சிப்பாய்களைப்போல் இருக்கிறபடியால் அவர்களை `எதிரி' ஒரு பொருட்டாய் எண்ணுவதில்லை! அதேபோல், மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடுகிறவர்களையும் எதிரியாகிய சாத்தான் அலட்சியப்படுத்தி...... மானிடர்களோடு சண்டையிட்டு மாயும்படி அவர்களைத் தனியே விட்டுவிடுகிறான்! ஆம், முழு இருதயம் கொண்டு கர்த்தருக்கென்று அக்கினிப்பிளம்பாய் இருப்பவர்கள் மாத்திரமே சாத்தானுக்கு `நடுக்கத்தைத்' தருகிறார்கள். இவர்கள் மாத்திரமே “கர்த்தருடைய யுத்தத்தை” செய்திட முடியும்!!

இவ்வாறு ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நாம், எல்லா சமயங்களிலும் மனஉறுதியுடன்கூடிய விழிப்புடன், சகல விசுவாசிகளுக்காகவும்...... குறிப்பாக தேவனுடைய வார்த்தையை உத்தமமாய் பிரசங்கிப்பவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டுமென தொடர்ந்து காணும் வசனங்கள் நம்மைத் துரிதப்படுத்துவதைக் காண்கிறோம் (எபேசியர் 6:18,19). ஏனெனில், இவர்களே எப்போதும் எதிரியின் கோபத்திற்கு `இலக்காய்' இருக்கிறார்கள்!!

சாத்தானுக்கு எதிரான யுத்தத்தை நாம் எவ்வாறு செய்திட வேண்டும் என்பதை 2நாளாகமம் 20-ம் அதிகாரத்தில் வரும் நிகழ்ச்சி நமக்குத் தெளிவாகப் போதிக்கிறது. அந்நிகழ்ச்சியில், யோசபாத் ராஜாவுக்கு எதிராக திரளான சேனைகள் திரண்டு வந்தார்கள் என வாசிக்கிறோம். இவ்வாறு எண்ணற்ற சத்துருக்களால் சூழப்பட்டபோது யோசபாத் ராஜா மிகச் சரியானதோர் செயலைச் செய்தான். ஆம், அவன் யூதா பட்டணத்தார் முழுவதையும் ஒன்றுகூட்டி, உபவாசத்தோடும் ஜெபத்தோடும் தேவனைத் தேடும்படி கட்டளை பிறப்பித்தான். பின்பு அவன் தேவனிடம் ஜெபித்தபோது, தங்கள் பெலஹீனத்தையும் தங்கள் விவேகமற்ற மதியீனத்தையும்....... ஆனால், அதேசமயம் தேவன் மீது தங்களுக்கு இருந்த விசுவாசத்தையும் அறிக்கை செய்து ஜெபித்தான்:

“எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்க மாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது!” (வசனம் 12) என ஜெபித்தான்.

பார்த்தீர்களா, இதுவே எந்த வலிமையான ஜெபத்திற்குமுரிய இரகசியமாகும். அதாவது, நம்முடைய பெலவீனத்தையும்; நம்முடைய விவேகமற்ற மதியீனத்தையும் உணர்ந்தவர்களாய்...... நமக்காக தேவன் யுத்தம் செய்யும்படி அவரையே முற்றிலுமாய் நம்பி சார்ந்து கொள்வதே அந்த இரகசியமாகும்.

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்     அச்சு வடிவம்    மின்அஞ்சல் அனுப்புக

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)